ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தவித்துவரும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரை கூட தோற்காத அணி என்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. டி20 தொடர் சமனடைந்த நிலையில், டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 2-1 என வென்றது.

ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இந்திய அணியிடம் வாங்கிய அடி அந்த அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. ஃபின்ச்சின் தலைமையில் அனுபவமற்ற வீரர்களுடன் திணறிவருகிறது. 

5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. நம்பிக்கையிழந்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அந்த அணி இழந்த நம்பிக்கையை பெற்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும் கேப்டன், மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் உத்வேகமாகவும் திகழ வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த நிலையில், ஓய்வில் இருக்கும் ஃபின்ச் பேசியபோது, நான் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கு பக்கத்தில் கூட வரமுடியவில்லை. அணியின் பலவீனமே நான் தான். ஒரு கேப்டனாக இது எனக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. எனினும் உலக கோப்பைக்கு முன்னதாக நான் இழந்ததை மீண்டும் கண்டுபிடித்து மீண்டெழ வேண்டும். பழைய அதிரடிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஃபின்ச் தெரிவித்தார்.