ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 231 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. 

தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் கேதர் ஜாதவ் 61 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்த தோனி, தொடர் நாயகன் விருதை வென்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், சிறந்த வீரர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்கும்போது, அது பாதிப்பை ஏற்படுத்தும். சில கேட்ச்களை தவறவிட்டோம். ஆனால் இவையெல்லாம் நடப்பது இயல்புதான். முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடினோம். இந்த போட்டியில் பொறுமையாக ஆடாமல் அவசரப்பட்டு விட்டோம். இந்த ஆடுகளத்தில் அடிக்க முடிந்த ஸ்கோரை விட அதிகமாக அடிக்க முயற்சித்தது தவறு என்று ஃபின்ச் தெரிவித்தார். 

தோனி களத்திற்கு வந்த முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச்சை மேக்ஸ்வெல் தவறவிட்டார். பின்னர் 74 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை கேப்டன் ஃபின்ச் தவறவிட்டார். இந்த இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்டதைத்தான் ஃபின்ச் குறிப்பிட்டார்.