இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கேப்டன் ஃபின்ச் அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 12, 15, 18 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. ஒருநாள் தொடருக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டன. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளுமே அதற்காக தீவிரமாகத் தயாராகிவருகின்றன. மற்ற அணிகளை விட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் வலுவாக உள்ளன. 5 முறை உலக கோப்பையை வென்ற பெருமையை கொண்ட ஆஸ்திரேலிய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவருகிறது. கடைசியாக அந்த அணி ஆடிய 20 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக வீரர்களை தேர்வு செய்வதற்கு இந்தியாவிற்கு எதிரான தொடரை அந்த அணி பயன்படுத்தி கொள்ளும். ஒரு பேலன்ஸான அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆடும் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் ஆடும் லெவனை அறிவித்துள்ளார். இதுவரை மிடில் ஆர்டரில் இறங்கிவந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை தொடக்க வீரராக களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி. பிக்பேஷ் லீக் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிவருகிறார் அலெக்ஸ் கேரி. எனவே அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளார். 

அந்த அணியின் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா ஆடவில்லை. நாதன் லயன் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஸ்பின் ஆப்ஷனாக பயன்படுத்துகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் பீட்டர் சிடில் ஆகிய மூவரும் இறக்கப்படுகின்றனர். இவர்களில் பீட்டர் சிடில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் களமிறங்குகிறார். இவர் கடைசியாக 2010ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியதுதான். அதன்பிறகு எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஆடவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

கடந்த இரண்டு பிக்பேஷ் லீக் சீசனில் அருமையாக ஆடிவருவதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் பீட்டர் சிடில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரிச்சர்ட்ஸன், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், பீட்டர் சிடில், நாதன் லயன்.