Australian Open Cypriot player Marcos Baghdatis defeated Indian veteran
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியை 6-7 (4), 4-6, 3-6 என்ற செட் கணக்கில் சைப்ரஸ் வீரர் மார்கோஸ் பக்ததிஸ் வீழ்த்தினார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் நேற்று தொடங்கியது. முதல் சுற்று ஆட்டத்தில் மார்கோஸை எதிர்கொண்டார் யூகி பாம்ப்ரி.
முதல் செட் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. அதில், மார்கோஸ் வெற்றி பெற அந்த செட் அவர் வசமானது. இதையடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை முறையே 6-4, 6-3 என்ற கணக்கில் மார்கோஸ் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த சீசனில் தகுதிச்சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிரதான சுற்றில் நுழைந்த ஒரே இந்தியரான யூகி பாம்ப்ரி முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியதால் அடுத்த சுற்றுக்கு அவரால் முன்னேற முடியாது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக்கன் குடியரசின் வி.ஈ.பர்கோஸை எளிதில் வீழ்த்தினார்.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரீன் சிலிச் 6-2, 6-2, 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கனடாவின் வி.பாஸ்பிசில்லை வீழ்த்தினார்.
