சிட்னியில் விராட் கோலியை கிண்டல் செய்த ஆஸி.ரசிகர்கள்; பதிலடி கொடுத்த இந்தியர்கள்!
சிட்னியில் நடந்து வரும் 5வது டெஸ்ட்டிலும் விராட் கோலி சொதப்பிய நிலையில், ஆஸ்திரேலிய ரசிகர்க்ள் கோலியை கிண்டல் செய்தனர். அதற்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விராட் கோலியை கிண்டல் செய்த ரசிகர்கள்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தொடர் முழுவதும் சொதப்பி வரும் விராட் கோலி 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக இன்று பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட் கோலியை சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோபப்படுத்தினர். அதாவது விராட் கோலி பேட்டுடன் களமிறங்கியபோது மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து கூச்சலிடத் தொடங்கினார்கள். மறுபுறம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'கோலி, கோலி' என வரவேற்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தியர்கள் பதிலடி
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடர் முழுவதும் விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. மெல்போர்ன் டெஸ்ட்ட்டில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாலிடம் கோலி வம்பிழுத்தது சர்ச்சையானது. இதேபோல் கடந்த டெஸ்ட்ட்டில் கோலி அவுட்டாகி சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். அப்போது கோலி அவர்களை பார்த்து முறைத்தார். இந்த சம்பவங்கள் காரணமாக கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் இன்றும் கிண்டல் செய்துள்ளனர்.
சிட்னியிலும் ஏமாற்றிய விராட் கோலி
ஆஸ்திரேலிய ரசிகர்களின் கிண்டல் ஒருபக்கம் இருக்கும் நிலையில், விராட் கோலி சிட்னி டெஸ்ட்டிலும் மோசமாக அவுட் ஆனார். அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்தில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவர் 69 பந்துகளை சந்தித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் மட்டும் கோலி சதம் அடித்தார். அதன்பிறகு அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதுவும் வரவில்லை. பெர்த் டெஸ்ட்டுக்கு பிறகு விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் 7, 11, 3, 36, 5, 17 என சொற்ப ரன்களையே எடுத்துள்ளார். ஒரு முறை கூட 40 ரன்களை தாண்டவில்லை. ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற போவதாக தகவல் பரவும் நிலையில், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துகள் உலா வருகின்றன.
டி20 கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்த கோலி
ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு கோலி டி20யில் இருந்து விலகினார். இப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் 50 ஓவர் போட்டிகளிலும் கோலி சரியாக விளையாடவில்லை.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலும் விராட் கோலி கிட்டத்தட்ட ஓராண்டாக சதம் அடிக்கவில்லை. அவர் தனது கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 117, 54, 24, 14, 20 என்ற ரன்களையே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மொத்தம் 58 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலி தனது கடைசி ஒருநாள் சதத்தை 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தான் அடித்தார். அதன்பிறகு அவர் ரன்கள் அடிக்கவில்லை.
விராட் கோலிக்கு ஆர்வம் இல்லை
தற்போது விராட் கோலி ரன்கள் அடிக்கும் வேகம் குறைந்து விட்டது. அதேபோல் ரன்கள் அடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு இல்லை. ஏனெனில் கோலியின் பேட்டிங் ஸ்டைலும், அவரது உடல்மொழியும் அதையே கூறுகிறது.
விராட் கோலி இப்போது 81 சதங்கள் எடுத்துள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை அவர் முறியடிப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் கோலிக்கு இப்போது 36 வயதாகி விட்டது. அவரது பேட்டிங் திறனும் குறைந்து விட்டது. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
சச்சினின் சாதனையை முறியடிப்பது கடினம்
விராட் கோலி 2027 வரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 7 சதங்கள் அடிக்க வேண்டும். விராட் கோலியின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, இந்த சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.