ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான் அணி, சொதப்பலான ஆட்டத்தால் வெற்றியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துபாயில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ஹஃபீஸ், ஹரிஷ் சோஹைல் ஆகியோரின் சதங்கள் மற்றும் இமாம் உல் ஹக், ஷாஃபிக்கின் அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 482 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் ஃபின்ச்சை தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. உஸ்மான் 85 ரன்களும் ஃபின்ச் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

280 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது. 

462 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கடந்த இன்னிங்ஸை போலவே உஸ்மானும் ஃபின்ச்சும் சிறப்பாக தொடங்கினர். எனினும் 49 ரன்களில் ஃபின்ச் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்களை சேர்த்தது. ஆனால் ஃபின்ச்சின் விக்கெட்டை அடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி வெளியேறியதால், 87 ரன்களில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து உஸ்மானுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், பொறுப்பாக ஆடினார். உஸ்மான் - ஹெட் ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 132 ரன்களை சேர்த்தது. அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட், 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து உஸ்மானுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் உஸ்மான் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிவருகிறார். பாகிஸ்தானின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், உஸ்மானுடன்  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி போட்டியை டிராவை நோக்கி அழைத்து செல்கிறது. 

உஸ்மான் 300 பந்துகளுக்கும் மேல் எதிர்கொண்டு 140 ரன்கள் குவித்துள்ளார். உஸ்மானுக்கு உறுதுணையாக டிம் பெய்ன் ஆடிவருகிறார். பெய்ன் சுமார் 25 ஓவர்களை எதிர்கொண்டு 40 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் டிராவை நோக்கி போட்டியை இட்டு செல்கிறது. முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் சொதப்பிவிட்டது. 

கடைசி நாளான இன்றைய ஆட்டம் முடிய இன்னும் 16 ஓவர்கள் மட்டுமே உள்ளன. அதனால் எப்படியும் இந்த ஓவர்களை ஆஸ்திரேலிய அணி ஓட்டிவிடும் என்பதால் போட்டி டிராவில் முடிந்துவிடும்.