ஜமைக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோரின் அபார பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது.
West Indies Historic Collapse : ஜமைக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வெறும் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 27 ரன்களுக்கு சுருட்டினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மிட்செல் ஸ்டார்க் 15 பந்துகளில் 5 விக்கெட்
மிட்செல் ஸ்டார்க் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 5 விக்கெட் சாதனையைப் படைத்தார். அதே நேரத்தில் 400 விக்கெட்டுகளையும் கடந்தார். மறுமுனையில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 400 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்களான ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத் மற்றும் நாதன் லியோன் ஆகியோரின் பட்டியலில் இணைந்துள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் இதுவரை 402 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சிதறிய வெஸ்ட் இண்டீஸ்
1955 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை 26 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததே டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை பதிவான மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா நிர்ணயித்த 204 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணியால் எட்ட முடியாது என்பது தெளிவாகியது.
1945 ஆம் ஆண்டில் எர்னி டோஷாக் படைத்த 15 பந்துகளில் 5 விக்கெட் சாதனையை ஸ்டார்க் முறியடித்தார். தொடர்ந்து போலண்ட் (3/2) ஜஸ்டின் கிரேவ்ஸ், ஷமர் ஜோசப் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோசப் மற்றும் வாரிக்கன் உட்பட 7 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்டார்க் ஜெய்டன் சீல்ஸை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 14.3 ஓவர்களில் சுருண்டது.
