- Home
- Sports
- Sports Cricket
- கடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!
கடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!
ஜடேஜாவின் போராட்டத்துக்கு மத்தியில் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

England Defeated India In The 3rd Test
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஒரு கட்டத்தில் 112/8 என பரிதவித்த இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து மீட்டார். பும்ராவும், சிராஜும் சூப்பராக பேட்டிங் செய்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். 30 பந்துகளை சந்தித்து போராடிய சிராஜ் கடைசியில் அவுட் ஆனவுடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
தொடக்கத்திலேயே விக்கெட் இழந்த இந்தியா
முன்னதாக 193 என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 58/4 என பரிதவித்தது. மேலும் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 5ம் நாள் ஆட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்கியது. ஆனால் ஆட்டம் தொடங்கியவுடன் காயத்துடன் தடுமாறி பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 9 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார். இதன்பிறகு கே.எல்.ராகுலும் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 39 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார்.
நிதிஷ் குமார் ரெட்டி ஏமாற்றம்
அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 87/7 என தள்ளாடியது. பின்பு ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டியும், ஜடேஜாவும் ஓரளவு நம்பிக்கை அளித்தனர். ஆனால் உணவு இடைவேளைக்கு முன்பாக நிதிஷ் குமார் ரெட்டியும் 13 ரன்னில் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணி 112/8 என மீண்டும் தத்தளித்தது.
பும்ரா சூப்பரான பேட்டிங்
இதனால் மீதமிருக்கும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடலாம் என இங்கிலாந்து பவுலர்கள் நினைத்தனர். ஆனால் பும்ரா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், கார்ஸ் மற்றும் ஸ்பின்னர் சோயிப் பஷிர் அனைத்து பவுலர்களின் பந்துகளையும் திறம்பட சமாளித்தார். ஜடேஜாவும் மறுமுனையில் ஒன்றிரண்டு ரன்கள் சேர்த்தார். இந்த பார்ட்னர்ஷிப் 30 ரன்களுக்கு மேல் கடநது சென்றதால் நம்பிக்கை பிறந்தது.
சிராஜும், ஜடேஜாவும் நம்பிக்கை அளித்தனர்
ஆனால் 54 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த பும்ரா ஸ்டோக்ஸின் ஷாட் பாலில் அவுட் ஆக இந்தியா 147க்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. மீதமுள்ள ஒரு விக்கெட்டை எளிதாக வீழ்த்தி விடலாம் இங்கிலாந்து பவுலர்கள் நினைத்தபோது சிராஜ் அதை தவிடுபொடியாக்கினார். அவரும் பும்ராவை போல் அற்புதமான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். மறுபக்கம் இவரை வைத்துக் கொண்டு ஜடேஜா அரை சதம் கடந்தார். தொடர்ந்து இந்த ஜோடி 20 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில் இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இங்கிலாந்து அணி வெற்றி
ஆனால் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த சிராஜ் சோயிப் பஷிர் பந்தை தடுத்து ஆடியபோது பந்து கீழே விழுந்து லேசாக ஸ்டெம்பை தாக்கியது. இதனால் இந்திய அணி 170 ரன்களுக்கு அல் அவுட்டாகி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை போராடிய ஜடேஜா 181 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.
77 ரன்களும், 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.