Australia Open Tennis Maria Sharapova action to bring down German veteran

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா, ஜெர்மனியின் டி.மரியாவை வீழ்த்தி அசத்தினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள முன்னாள் 'நம்பர் 1' வீராங்கனை ரஷியாவின் மரியா ஷரபோவா, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில், தரவரிசையில் 47-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் டி.மரியாவை வீழ்த்தினார்.

முதல் வெற்றி குறித்து ஷரபோவா, 'பழைய நிலைக்குத் திரும்பி விட்டேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
இரண்டாவது சுற்றில், லாத்வியாவின் ஏ.செவஸ்டோவாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறார் ஷரபோவா.

மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 3-ஆவது இடம் வகிப்பவரான ஸ்பெயினின் முகுருசா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில், பிரான்சின் ஜெஸிகாவை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் பௌச்சர்டு (கனடா), ஏ.கெர்பர் (ஜெர்மனி), ஏ.சாஸ்னோவிச் (பெலாரஸ்), அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) ஆகிய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும், 5 முறை ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ரோஜர் ஃபெடரர், ஸ்லோவேனியாவின் ஏ.பெடேனேவை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில், 6 முறை ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள செர்பியாவின் ஜோகோவிச், 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் டொனால்டு யங்கை வீழ்த்தினார்.

இதேபோல், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவும் முதல் சுற்றில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.