கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ரன்களை கட்டுப்படுத்திவிட்டனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மெல்போர்னில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ராயுடு, குல்தீப், சிராஜ் ஆகியோருக்கு பதிலாக முறையே கேதர் ஜாதவ், சாஹல், விஜய் சங்கர் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின் பவுலர்கள் என 6 பவுலிங் ஆப்ஷனுடன் களமிறங்கியுள்ளது. 

முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியை புவனேஷ்வர் குமாரும் ஷமியும் சேர்ந்து முதல் 10 ஓவர்களில் கட்டுப்படுத்தினர். ரன்களை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அலெக்ஸ் கேரியை 5 ரன்களிலும் ஃபின்ச்சை 14 ரன்களிலும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அந்த அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பிறகு அடுத்த 10 ஓவர்களை கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் வீசினர். இரண்டாவது 10 ஓவரில் விக்கெட்டுகள் விழவில்லை. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ள உஸ்மான் கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 24வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய சாஹல், அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷான் மார்ஷை(39 ரன்கள்) வீழ்த்தினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் உஸ்மான் கவாஜாவையும் வீழ்த்தினார் சாஹல். களத்தில் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டு வீரர்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சாஹல். 24 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்து ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி.