பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் மாதம், ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், இளம் வீரர் பான்கிராஃப்ட்க்கு 9 மாதம் தடைவிதிக்கப்பட்டது. 

சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தாலும் கவுன்டி போட்டிகளில் விளையாடி வருகிறார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும்.

இந்நிலையில் 29 வயதான ஸ்டீவ் ஸ்மித், தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை நேற்று திருமணம் செய்தார். சட்டப் படிப்பு படித்துள்ள டேனி வில்லிசை 2011-ம் ஆண்டு சிட்னியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் முதல்முறையாக சுமித் சந்தித்தார். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்மித் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.