இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். இது புவனேஷ்வர் குமாரின் 100வது ஒருநாள் விக்கெட். 

இதையடுத்து கேரியுடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. 10வது ஓவரை வீச சைனாமேன் குல்தீப்பை அழைத்தார் கேப்டன் கோலி. குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே கேரியை வீழ்த்தினார். 

10 ஓவருக்கு உள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை நிதானமாக கையாண்டதோடு ரன்களையும் சேர்த்தது. ஜடேஜாவும் குல்தீப்பும் மாறி மாறி வீச, கவாஜாவும் ஷான் மார்ஷும் அவர்களை திறமையாக எதிர்கொண்டு ஆடினர். இதையடுத்து பரிசோதனை முயற்சியாக அம்பாதி ராயுடுவை பந்துவீச அழைத்தார் கேப்டன் கோலி.

22வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ராயுடு அந்த ஓவரை நன்றாக வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதன்பிறகு ராயுடு வீசிய 24வது ஓவரில் கவாஜா 2 பவுண்டரிகளை அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு ராயுடுவிடம் கோலி பந்தை கொடுக்கவில்லை. பரிசோதனை முயற்சி பலனளிக்கவில்லை. 

இதையடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கவாஜா, அரைசதம் கடந்தார். கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில், பிரேக் கொடுத்தார் ஜடேஜா. 59 ரன்கள் அடித்திருந்த கவாஜா, ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 92 ரன்களை குவித்தது.

133 ரன்களில் கவாஜாவின் விக்கெட்டை இழந்த பிறகு ஷான் மார்ஷுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. கவாஜாவை தொடர்ந்து ஷான் மார்ஷும் அரைசதம் கடந்தார். ஆனால் அரைசதம் கடந்த பிறகு அவரும்  நிலைக்கவில்லை. 54 ரன்களில் ஷான் மார்ஷை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். 

இதையடுத்து ஹேண்ட்ஸ்கம்புடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார். 38வது ஓவரில் ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தார். அதற்கு முந்தைய ஓவரான 37வது ஓவரிலிருந்து 43வது ஓவர் வரையிலான 7 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட இந்திய வீரர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. 7 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காத ஹேண்ட்ஸ்கம்பும் ஸ்டோய்னிஸும் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து அதன்பிறகு அடித்தனர். குல்தீப் வீசிய 44வது ஓவரில் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸரும் ஹேண்ட்ஸ்கம்ப் ஒரு சிக்ஸரும் விளாசினர். இந்த சிக்ஸரின் மூலம் அரைசதத்தை பூர்த்தி செய்த ஹேண்ட்ஸ்கம்ப், அதன்பிறகு அடித்து ஆடினார். ஸ்டோய்னிஸும் அடித்து ஆடினார். அதன்பிறகு ஜடேஜா, ஷமி, குல்தீப், புவனேஷ்வர் குமார் என அனைவரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர். 

43 ஓவருக்கு 208 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. குல்தீப் வீசிய 44வது ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட 14 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜடேஜா வீசிய 45வது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 46வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 11 ரன்களை குவித்தனர். ஷமி ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்த, புவனேஷ்வர் குமாரின் ஓவரை விளாசி எடுத்தனர். அபாரமாக ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப்பை ஒரு வழியாக 73 ரன்களில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஆனால் அவுட்டாவதற்கு முந்தைய பந்தில் கூட ஹேண்ட்ஸ்கம்ப் ஒரு சிக்ஸர் அடித்தார். 

48 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. ஷமி வீசிய 49வது ஓவரில் 11 ரன்களும் புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் குவிக்கப்பட்டன. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. 

43 ஓவருக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி, கடைசி 7 ஓவரில் அடித்து ஆடி 80 ரன்களை குவித்தது. இந்திய அணி 289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்குகிறது.