கடைசி ஒருநாள் போட்டியில் சாஹலின் சுழலில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை புவனேஷ்வர் குமாரும் ஷமியும் சேர்ந்து முதல் 10 ஓவர்களில் கட்டுப்படுத்தினர். ரன்களை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அலெக்ஸ் கேரியை 5 ரன்களிலும் ஃபின்ச்சை 14 ரன்களிலும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அந்த அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பிறகு அடுத்த 10 ஓவர்களை கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் வீசினர். இரண்டாவது 10 ஓவரில் விக்கெட்டுகள் விழவில்லை. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 24வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய சாஹல், அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷான் மார்ஷை(39 ரன்கள்) வீழ்த்தினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் உஸ்மான் கவாஜாவையும் வீழ்த்தினார் சாஹல். களத்தில் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டு வீரர்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சாஹல்.

மார்கஸ் ஸ்டோய்னிஸையும் 10 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் சாஹல். பின்னர் ஹேண்ட்ஸ்கம்ப்புடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அடித்து ஆடினார். பவுண்டரிகளாக அடித்து ரன்களை வேகமாக குவித்து வந்த மேக்ஸ்ல்வெல், ஷமியிடம் வீழ்ந்தார். ஷமி வீசிய பந்தில் எட்ஜாகி பந்து மேலெழும்ப, அதை அருமையாக கேட்ச் செய்தார் புவனேஷ்வர் குமார். 

அதன்பிறகு ஹேண்ட்ஸ்கம்புடன் ஜோடி சேர்ந்த ரிச்சர்ட்ஸன், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 16 ரன்களில் ரிச்சர்ட்ஸனையும் சாஹல் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 63 பந்துகளில் 58 ரன்கள் அடித்த அவரை, 46வது ஓவரில் சாஹல் வீழ்த்தினார். 

இதையடுத்து ஆடம் ஸாம்பா மற்றும் ஸ்டேன்லேக் ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி, 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.