மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ராவின் வேகத்தில் வெறும் 151 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி. 292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இந்திய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம், மயன்க், கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரின் பொறுப்பான அரைசதத்தால் 443 ரன்களை குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 6 ஓவர்கள் இருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை எடுத்திருந்தது. அத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஃபின்ச்சின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இதையடுத்து  மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் பும்ராவும் உஸ்மான் கவாஜாவை ஜடேஜாவும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. மிட்செல் மார்ஷை ஜடேஜாவும் கம்மின்ஸை ஷமியும் வீழ்த்தினர். டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்திருந்தது. 

டீ பிரேக் முடிந்து வந்த சில நிமிடங்களிலேயே எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயார்படுத்தினார் பும்ரா. டீ பிரேக் முடிந்து வந்த இரண்டாவது ஓவரிலேயே ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை பும்ரா வீழ்த்தினார். 65வது ஓவரில் டிம் பெய்னை வீழ்த்திய பும்ரா, 67வது ஓவரில் நாதன் லயன் மற்றும் ஹேசில்வுட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்தார். 

ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 292 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.