பாகிஸ்தான்–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்தது.
>
> இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
>
> முதல் இரு ஆட்டங்களில் (120 ரன், 123 ரன்) சதம் விளாசிய பாபர் அசாம் இந்த ஆட்டத்திலும் சதத்தை ருசித்து ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார். அவர் 106 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 117 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ சதங்களை பதிவு செய்த 2–வது வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.
>
> இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.
>
> ஒட்டுமொத்தத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் சதம் அடித்த 8–வது வீரர் என்ற சிறப்பையும் பாபர் அசாம் பெற்றார்.
>
> இதேபோல் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அசார் அலியும் (101 ரன்) செஞ்சுரி போட்டார். 3–வது சதம் கண்ட அசார் அலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனைக்குரியவரானார். இதற்கு முன்பு இன்ஜமாம், அப்ரிடி கேப்டனாக தலா 2 சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
>
> பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44 ஓவர்களில் 172 ரன்னில் சுருண்டது.
>
> இதனால் பாகிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3–0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றியது.

