Asian Women Boxing Marie Kom and Sonia Latars Functional Progress ...

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சோனியா லேதர் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர 5 இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினர்.

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதியில் ஜப்பானின் சுபாசா கோமுராவுடன் மோதினார். இதில், 5-0 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார்,

அவர் தனது இறுதிச்சுற்றில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை எதிர்கொள்கிறார்.

இதேபோல், மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சோனியா லேதர் தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் யோத்கோராய் மிர்ஸவாவை வீழ்த்தினார்.

இறுதிச்சுற்றில் அவர் சீனாவின் யின் ஜுன்ஹுவாவை புதன்கிழமை எதிர்கொள்கிறார்.

ஆனால், 64 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சரிதா தேவி, அரையிறுதியில் சீனாவின் டெள டானிடம் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.

அதேபோன்று 54 கிலோ பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சிக்ஷாவை, சீன தைபேவின் லின் யு டிங் அரையிறுதியில் வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டமான 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பிரியங்கா செளதரி, தென் கொரியாவின் ஒஹ் யோஞ்சியிடம் அரையிறுதியில் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார்.

அதேபோன்று 69 கிலோ பிரிவு அரையிறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், கஜகஸ்தானின் வாலென்டினா கால்சோவாவிடமும், 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு அரையிறுதியில் சீமா பூனியா, கஜகஸ்தானின் குஸல் இஸ்மடோவாவிடமும் வீழ்ந்து வெண்கலத்தோடு வெளியேறினர்.