ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக தற்காப்பு ஆட்ட வீராங்கனை சுனிதா லக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி கொரியாவின் டோங்கே நகரில் வரும் 13-ஆம் தேதி தொடங்குகின்றன. 

காமன்வெல்த் போட்டிகளில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அரையிறுதியில் நுழைந்த உற்சாகத்துடன் சாம்பியன் கோப்பை போட்டியை இந்திய மகளிர் எதிர் கொள்கின்றனர். 

இதில், 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர் சவீதா துணை கேப்டனாக செயல்படுவார். கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த தீபிகா, தீப் கிரேஸ் எக்கா, சுமன்தேவி, குர்ஜித் கெளர் தற்காப்புக்கும், நடுக்களத்தில் மோனிகா, நமீதா தோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லில்லிமா மின்ஸ், நவ்ஜோத் கெளர், உதிதா ஆகியோரும் செயல்படுவர். 

முன்களத்தில் வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, நவ்நீத் கெளர், அனுபா பர்லா ஆகியோர் இணைந்து எதிரணிக்கு சவால் விடுப்பர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன் கோப்பை இறுதியில் சீனாவை வீழ்த்தி இந்தியா கோப்பை வென்றது. வரும் 13-ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.

ஜோயர்ட் மார்ஜின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் ஆசிய சாம்பியன் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.