இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி 3-1 என தொடரை வெல்லும், போட்டி டிரா ஆனாலும் 2-1 என இந்திய அணி தொடரை வெல்லும். இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆனால் இந்திய அணியை வரலாறு சாதனை படைக்கவிடாமல் தடுக்க, ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால் அந்த அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி. எனவே அந்த நெருக்கடியை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ளும். 

ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் கடைசி போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். அஷ்வின் காயத்திலிருந்து மீண்ட நிலையில் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் 13 வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. 

இந்த அணியில் ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் மூன்று போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல காயத்திலிருந்து மீண்ட அஷ்வின் பெயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஆடுவது உறுதியில்லை. நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அஷ்வின் ஆடுவதும் ஆடாததும் உறுதி செய்யப்படும். 

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார் அஷ்வின். ஆனால் காயம் காரணமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பந்துவீச்சுதான் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருவேளை அந்த போட்டியில் அஷ்வின் ஆடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. 

அதேபோல காயத்திலிருந்து அஷ்வின் மீளாததால், மெல்போர்ன் டெஸ்டிலும் அஷ்வின் ஆடவில்லை. ஸ்பின்னராக ஜடேஜா ஆடினார். இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது மிகவும் அவசியம். ஸ்பின் பவுலிங்கில் அவரது அனுபவமான பந்துவீச்சு இந்திய அணிக்கு முக்கியம். ஆனால் முக்கியமான தொடரில் அவர் தொடர்ந்து காயமடைவது அணிக்கு பெரும் பின்னடைவையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணியின் பெயர் பட்டியலில் அஷ்வின் பெயரும் உள்ளது. ஆனால் அவர் ஆடுவது உறுதியல்ல. எனவே அந்த 13 வீரர்களை கொண்ட அணியில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.