இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் தனக்கான இடத்திற்காக காத்திருப்பதாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டனாக இருந்தபோது அவரது ஆஸ்தான ஸ்பின்னர்களாக திகழ்ந்தவர்கள் அஷ்வினும் ஜடேஜாவும். இருவரும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இருவருமே ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். எனினும் அதன்பிறகு ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. 

அவர்களுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இருவருமே அபாரமாக பந்துவீசி, இந்திய அணிக்கு கடந்த ஓராண்டாக வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளனர். அதிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் அவர்கள் பந்துவீசிய விதம் அபாரம். இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையை சரித்து, இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தனர். 

அவர்கள் சிறப்பாக பந்துவீசி வருவதால் இந்திய அணியில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஓராண்டாக ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த ஜடேஜா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்று தனது திறமையையும் நிரூபித்தார். அதன் விளைவாக ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஜடேஜா, ஆசிய கோப்பை தொடரில் நன்றாக ஆடினார். 

ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துவிட்ட நிலையில், அஷ்வின் இன்னும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள அஷ்வின், இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், எனக்கும் ஜடேஜாவிற்கும் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த சாஹலும் குல்தீப்பும் உண்மையாகவே அருமையாக பந்துவீசிவருகின்றனர். அவர்களை பாராட்டியே தீர வேண்டும். போட்டி என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். அவர்கள் நன்றாக வீசுகிறார்கள். எனினும் எனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்து மீண்டும் அழைக்கப்பட்டால் கண்டிப்பாக அணிக்காக சிறப்பாக ஆடுவேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார்.