ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி சாதனை படைத்துள்ளது. 

அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தன. 15 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

323 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சை அஷ்வின் வீழ்த்தினார். நான்காம் நாள் ஆட்டத்தில் ஃபின்ச்சை அஷ்வின் வீழ்த்தியதும் டீ பிரேக் விடப்பட்டது. ஃபின்ச்சின் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வினை அனைத்து வீரர்களும் பாராட்டினர். 

அப்போது, அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவிக்க ரோஹித் சர்மா அவருக்கு பின்னாடியே சென்றார். ஆனால் அஷ்வினோ ரோஹித்தை கண்டுகொள்ளாமல் சென்றார். அதனால் ரோஹித் சர்மா, அஷ்வினின் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். இந்த காட்சி நேரலையாக ஒளிபரப்பானது. அஷ்வினின் செயல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அஷ்வின், யாரிடமோ பேசிக்கொண்டே சென்றதால் ரோஹித் சர்மா கையை நீட்டியதை கவனிக்கவில்லை. ஆனால் அவர் யாருடன் பேசினாரோ அவர் ஃப்ரேமில் இல்லை. எனினும் ரோஹித்தை அஷ்வின் கண்டுகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.