Ashes Test Australia won by 120 runs

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 126 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓவர்டன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 76.1 ஓவர்களில் 227 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஓவர்டன் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுக்க, ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா, 2-வது இன்னிங்ஸைத் தொடங்கி 58 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டார்க் அதிகபட்சமாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிகமாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 354 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இங்கிலாந்து செவ்வாய்க்கிழமை முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 67 ஓட்டங்கள் , கிறிஸ் வோக்ஸ் 5 ஓட்டங்களுடன் தொடங்கினர்.

அதில் ரூட் மட்டும் அதிகபட்சமாக 67 ஓட்டங்கள் எடுத்தார். வோக்ஸ் 5 ஓட்டங்கள் , மொயீன் அலி 2 ஓட்டங்கள், பேர்ஸ்டோவ் 36 ஓட்டங்கள் , ஓவர்டன் 7 ஓட்டங்கள் , ஸ்டுவர்ட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 84.2 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அந்த அணியின் ஷான் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.