Ashes Test Australia defeated England in both innings and run
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா.
சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய கடைசி போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 346 ஓட்டங்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 83 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 193 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 171 ஓட்டங்கள், ஷான் மார்ஷ் 156 ஓட்டங்கள், மிட்செல் மார்ஷ் 101 ஓட்டங்கள் விளாசினர்.
டிம் பெய்ன் 38 ஓட்டங்கள், பேட்ரிக் கம்மின்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 303 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 42 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோவ் 17 )ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் அரைசதம் கடந்த ஜோ ரூட், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வயிற்று வலி காரணமாக "ரிடையர்டு ஹர்ட்' ஆகி வெளியேறினார். அப்போது அவர் 58 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
அடுத்தபடியாக டாம் கியூரன் களம் கண்ட நிலையில், பேர்ஸ்டோவ் 4 பவுண்டரிகள் உள்பட 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் பேட்ரிக் கம்மின்ஸ்.
பின்னர் வந்த ஸ்டூவர்ட் பிராட் 4 ஓட்டங்கள், மேசன் கிரேன் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். அவர்கள் இருவருமே பேட்ரிக் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
கடைசி விக்கெட்டான ஜேம்ஸ் ஆன்டர்சன் 2 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஹேஸில்வுட் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 180 ஓட்டங்களுக்குள்ளாக சுருண்டது. டாம் கரன் மட்டும் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்கள், நாதன் லயன் 3 விக்கெட்கள், ஸ்டார்க், ஹேஸில்வுட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பேட்ரிக் கம்மின்ஸ் ஆட்டநாயகனாகவும், ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
முதல் 3 ஆட்டங்களிலும், கடைசி ஆட்டத்திலும் அந்த அணி வென்ற நிலையில், 4-ஆவது ஆட்டத்தை மட்டும் இங்கிலாந்து டிரா செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
