2024ன் சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங்; மாபெரும் சாதனை; ரசிகர்கள் குஷி!

இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங், 2024ம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார். உலக அரங்கில் அவர் மாபெரும் சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Arshdeep Singh wins T20I Player of the Year 2024 award ray

2024ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அடிப்படையாக வைத்து விருது வழங்கி வருகிறது. அதாவது டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதை இந்திய பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் வென்று சாதனை படைத்துள்ளார்.

டி20 சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் டிராவிஸ் ஹெட், பாபர் அசாம், சிக்கந்தர் ராசா ஆகியோரும் இருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் இந்த 3 பேரையும் முறியடித்து ஐசிசி விருதை தட்டிச்சென்றுள்ளார். இந்தியாவின் முன்னணி டி20 பவுலராக வலம் வரும் அர்ஷ்தீப் சிங், 2024ம் ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அர்ஷ்தீப் சிங் சாதனை 

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பயை இந்தியா கைப்பற்றியதில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்தார். உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்து இந்தியா கோப்பையை கையில் ஏந்த காரணமாக விளங்கினார். 

2024ம் ஆண்டில் அர்ஷ்தீப் சிங் தனது விக்கெட்டுகளை சராசரியாக 15.31 என்ற கணக்கில் சாய்த்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் 7.49 என்ற எகானமி ரேட்டுடன் ரன்களை கொடுத்து சிக்கனத்தை கடைபிடித்துள்ளார். 10.80 ஸ்ட்ரைக் ரேட்டில் விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் 

டி20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங், அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தில் இருக்கிறார். அர்ஷ்தீப் சிங் 67 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டி20 போட்டியில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தன்னுடைய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இதேபோல் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ரசிகர்கள்  வாழ்த்து மழை 

இது தவிர, ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கி வரும் அவர் 65 ஐபிஎல் போட்டிகளில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தியதால் ஐசிசியின் சிறந்த வீரர் என்ற மணிமகுடம் அர்ஷ்தீப் சிங்குக்கு கிடைத்துள்ளது. உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அர்ஷ்தீப் சிங்குக்கு இந்திய முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios