arbaaz khan confessed his involvement in ipl betting

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வங்கி கணக்கின் பண பரிவர்த்தனைகளை ஆராய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎல் 11வது சீசன் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10வது சீசனின்போது, சூதாட்டம் நடந்தது தெரியவந்ததை அடுத்து, அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீஸார், சிலரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ஜலான் என்பவரை கைது செய்தனர். இவர் தான் இந்த சூதாட்ட கும்பலில் மிக முக்கியமானவர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பதும் வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் ஜலானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான், பாலிவுட் முன்னணி நடிகரான சல்மானின் கானின் தம்பி ஆவார். அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஜலான் கூறியதை அடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்பாஸ் கானுக்கு தானே போலீஸார் சம்மன் அனுப்பினர்.

அதனடிப்படையில், நேற்று நேரில் ஆஜரான அர்பாஸ் கானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கிய அர்பாஸ் கான், போலீஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அர்பாஸ் கான் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அர்பாஸ் கான் வங்கிக் கணக்கின் பண பரிவர்த்தனைகளை ஆராய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.