இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாமல், புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை, ரசிகர்கள் வறுத்தெடுத்துள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை. பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணி தொடரை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. 

இங்கிலாந்து தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றத்தையே அளித்தார். ஆரம்பத்தில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்ட பாண்டியா, காலப்போக்கில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் நான்கு போட்டிகளில் ஆடிய பாண்டியா,  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே நன்றாக ஆடினார். மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். அதைத்தவிர வேறு எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினார். இங்கிலாந்து தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா, ஒன்றுமே செய்யவில்லை. அதனால்தான் கடைசி போட்டியில் அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தார். 

இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா, புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கையில் பேண்டுகள், மோதிரங்கள், செயின்கள், கண்ணாடி ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் கொதிப்படைந்தனர். 

ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விளாசியுள்ளனர். ரசிகர் ஒருவர், உங்களின் செயல் ரொம்ப ஓவர்; முதலில் நன்றாக ஆடுங்கள். இல்லையென்றால் இதுபோன்று ஸ்டைல் மட்டும்தான் செய்யமுடியும். அணியில் இடம் கிடைக்காது என சாடியுள்ளார். மற்றொரு ரசிகர், ஹர்திக்கின் தோற்றம் கேங்ஸ்டெர் போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.