உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டி பிளவர், உலக கோப்பையில் இந்திய அணி கடுமையான போட்டியாளர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பை இங்கிலாந்தில் நடந்தாலும், இந்திய அணிக்கு வெளிநாட்டில் ஆடும் உணர்வு இருக்கவே இருக்காது. ஏனெனில் அங்கும் இந்திய அணிக்கு மிக அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதனால் அவர்கள் உள்நாட்டில் ஆடுவதை போன்றே உணர்வார்கள். அண்மைக்காலமாக இந்திய அணி அனைத்து தொடர்களிலும் சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணி முன்பைவிட தற்போது அதிக நம்பிக்கை வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதற்கு, இந்தியா ஒரு நாடாகவும் பொருளாதார ரீதியிலும் அடைந்திருக்கும் வளர்ச்சியும் ஒரு காரணம். மற்றொரு காரணம், ஐபிஎல். ஐபிஎல் தொடர் இந்திய அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. ஐபிஎல்லில் திரளான ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் ஆடிய அனுபவத்தை பெற்றுள்ள இளம் வீரர்கள், சர்வதேச போட்டியிலும் அபாரமாக ஆடுகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் நல்ல வேகப்பந்து வீச்சு யூனிட் உள்ளது. இந்திய வீரர்கள் மிகவும் ஃபிட்டாக உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆண்டி பிளவர் தெரிவித்தார்.