இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா சதமடித்து, தனது 100-ஆவது டெஸ்டில் சதமடித்த 8-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 7-ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் ஆம்லா பெற்றுள்ளார்.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீபன் குக் 10 ஓட்டங்களிலும், டீன் எல்கர் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஹஷிம் ஆம்லா - ஜே.பி.டுமினி ஜோடி 292 ஓட்டங்கள் குவித்தது. டுமினி 221 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 155 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஆம்லா 221 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

சர்வதேச அளவில் ஆம்லாவோடு சேர்த்து மொத்தம் 8 பேர் தங்களின் 100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளனர்.

அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கர்களில் ஆம்லா 2-ஆவது வீரர் ஆவார். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் ஆவார்.