ambathi rayudu attracts du plessis by batting

அம்பாதி ராயுடுவின் பேட்டிங் தன்னை ஈர்த்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கேப்டனும் சென்னை அணியின் வீரருமான டுபிளெசிஸ் புகழ்ந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடிவரும் தோனி தலைமையிலான சென்னை அணி எதிரணிகளை மிரட்டி வருகிறது.

தோனி, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளதால் 200 ரன்களை எளிதாக கடக்கிறது சென்னை அணி. அதிலும் ராயுடு மற்றும் தோனியின் ஃபார்ம் அபாரம். இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரராக அம்பாதி ராயுடு திகழ்கிறார். ஆரஞ்சு தொப்பி அவர் வசமே உள்ளது.

பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான தோனியின் அதிரடி பேட்டிங் எதிரணிகளை மிரட்டிவிட்டது. தோனியும் சிறந்த ஃபார்மில் இருப்பதால் எந்த பவுலர் போட்டாலும் அடித்து நொறுக்குகிறார். நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட்டின் பந்துவீச்சை பறக்கவிட்டார்.

இந்நிலையில், டெல்லி அணியுடனான போட்டிக்கு பிறகு பேசிய சென்னை வீரர் டுபிளெசிஸ், தோனி வலுவான ஃபார்மில் இருக்கிறார். அதனால் எந்த பவுலர் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கிவிடுவார். தோனியின் தற்போதைய ஃபார்ம் எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும்.

ராயுடுவும் சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். எந்த வரிசையில் இறக்கினாலும் ராயுடு காட்டடி அடிக்கிறார். ராயுடுவின் பேட்டிங் என்னை கவர்ந்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடி, 3வது வீரராக ரெய்னாவும், 4வது வீரராக ராயுடுவும் களமிறங்கினால், எதிரணிக்கு மிகுந்த ஆபத்தாக அமைந்துவிடும் என டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.