All-rounder Yousuf Pathan banned from participating in cricket matches - BCCI Action ...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் -ரௌண்டரான யூசுஃப் பதான் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பிசிசிஐ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி பரோடா - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்ற உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பரோடா சார்பில் பதான் விளையாடுவதற்கு முன்பு அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், இருமல் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பயன்படும் ஒருவித வேதிப்பொருளை அவர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அந்த வேதிப்பொருளை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சர்வதேச ஊக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (வாடா) விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக யூசுஃப் பதானிடம் பிசிசிஐ விளக்கம் கோரியது. அதைத் தொடர்ந்தது, அவர் வெளியிட்ட அறிக்கையில், "தவறுதலாக அந்த மருந்தை உட்கொண்டதாகவும், பரோடா அணி மற்றும் இந்திய அணியின் பெருமைக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாக பிசிசிஐ அறிவித்தாலும், அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் 5 மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்தது. அவரது தடைக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
யூசுஃப் பதான், இந்திய அணிக்காக 57 ஒரு நாள் போட்டிகள், 22 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
