ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தால், சவுத்தாம்டனில் நேற்று இரவு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தால், சவுத்தாம்டனில் நேற்று இரவு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 50 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சர்வதேச அளவில் பெறும் 18-வது டி20 வெற்றி இதுவாகும். ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் பெறும் 13-வது வெற்றியாகும். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
ரோஹித் சர்மா இதுவரை கேப்டனாக 29 போட்டிகளில் அணியை வழிநடத்திச்சென்று 25 வெற்றிகளைப் பெறறுக் கொடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றிப் பெற்றுக் கொடுத்த கேப்டன், மற்றும் முதல் இந்தியக் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றார்.
பேட்டிங்கில் 33 பந்துகளில் 53 ரன்கள்(6பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்தும் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் டி20 கேப்டனாக இருந்த மோர்கன் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய கேப்டனாக ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் முதல் போட்டியை இங்கிலாந்து அணி சந்தித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி சொந்த மண்ணிலேயே பல்பு வாங்கியது. பட்லர், ஜேஸன் ராய், டேவிட் மலான் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக பேட் செய்தனர்
இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு பலர் இருக்கும்போது அணியில் இரு கீப்பர்களுடன் களமிறங்கியிருக்க வேண்டியதில்லை. அனுபவமும், பினிஷிங் திறமையும் வாய்ந்த தினேஷ்கார்த்திக் இருக்கும்போது, இஷான் கிஷனே நேற்று களமிறக்கினர்.

முதல் போட்டியிலேயே 8 ரன்களுடன் இஷாந் கிஷன் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித்சர்மா அதிரடியாக 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ்(39), தீபக் ஹூடா(33) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹர்சல் படேல்(17), தினேஷ் கார்த்திக்(11) ரன்களிலும் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தபோதிலும் அதிரடியாகஆடி ரன்கள்குவித்த ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார 1, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சைப் பொறுத்தவரை சொல்லிக்கொள்ளும்வகையில் கட்டுக்கோப்பாக யாரும் பந்துவீசவில்லை. கிறிஸ் ஜோர்டன் மட்டுமே ஓரளவு பரவாயில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருமே10 ரன் ரேட்டுக்கு மேல் வாரி வழங்கினர். மொயின் அலி, ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மில்ஸ், பார்க்கின்ஸன், டாப்லி தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

இங்கிலாந்து அணிக்கு 199 ரன்கள் என்பது பெரிய சவாலாகத்தான் இருந்தது. அனுபவ பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரிலேயே பட்லரை டக்அவுட்டில் பெவிலியன் அனுப்பினார். ஹர்திக் பாண்டியா தான் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் மலானை(21), லிவிங்ஸ்டோனை(0) வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.
நடுவரிசையில் ஹேரி ப்ரூக்(28), மொயின் அலி(36)ரன்கள் சேர்த்தனர். மற்றவகையில் இ்ங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை.சாம்கரன்(4), ஜேஸன் ராய்(4) மில்ஸ்(7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் விரைவாக இழந்து தோல்வி அடைந்தது.
இந்திய அணித் தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சஹல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
