All Indian basketball championships are the men christian college and women vaishnava college champions.
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை கிறித்தவக் கல்லூரி அணியும், மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணியும் வாகை சூடின.
நான்காவது அகில இந்திய கல்லூரிகள் இடையிலான ஸ்டெர்லைட் சுழற்கோப்பைக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது.
இதில், ஆடவர் பிரிவில் 8 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி அணியும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி அணி 88-85 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது.
மூன்றாவது இடத்தை டிஜி வைஷ்ணவ கல்லூரி அணியும், நான்காவது இடத்தை ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி அணியும் பிடித்தன.
அதேபோன்று, மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணியும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் சென்னை எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி 62-42 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது.
மூன்றாவது இடத்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த அசும்சன் கல்லூரி அணியும், நான்காவது இடத்தை பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் பிடித்தன.
போட்டிக்கு பிறகு தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் பங்கேற்று வெற்றிப் பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
