ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனியின் மந்தமான ஆட்டத்தை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகார்கர். 

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்களை குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர் ரோஹித்தும் தோனியும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 

அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் தேவை என்பதால் இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோஹித் சர்மா அவ்வப்போது சில ஷாட்டுகளை ஆடினார். ஆனால் தோனி ரொம்ப மந்தமாக ஆடினார். அதிரடியாக ஆட தொடங்க வேண்டிய நேரத்தில் தோனி 51 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் வெளியேற ஆட்டம் கை மீறிப்போனது. ரோஹித் சர்மா களத்தில் இருந்தாலும் வெல்ல முடியாத சூழல் உருவானது. இந்திய அணி 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகமான பந்துகளை விழுங்கினார் தோனி. ரோஹித்துடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த பிறகு அவரும் அரைசதம் கடந்த பிறகு, அடித்து ஆடி வீணான பந்துகளை ஈடுகட்ட ஆரம்பிக்கும்போதே விக்கெட்டை இழந்துவிட்டார். அதுவும் அது அவுட்டே இல்லை. ரிவியூ இல்லாததால் தோனி வெளியேற வேண்டியதாயிற்று. 96 பந்துகளில் 51 ரன்களை அடித்தார் தோனி. தோனி அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஓரளவிற்கு இந்த இடைவெளியை ஈடுகட்டியிருப்பார். 

ஏனென்றால் களத்தில் நிலைத்து சூழலை நன்கு அறிந்த தோனி அடித்து ஆடுவது எளிது. ஆனால் புதிதாக களத்திற்கு வந்த வீரர் உடனடியாக அடித்து ஆடுவது சற்று கடினம். தோனி ஆடிய பந்துக்கும் அடித்த ரன்னுக்கும் இடையேயான இடைவெளியும் கடைசி நேரத்தில் நெருக்கடியை அதிகரித்தது. ஆனால் தோனி ஆடிய இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனியின் விக்கெட் விழாமல் இருந்திருந்தால் ஆட்டம் நமக்கு சாதகமாக இருந்திருக்கும்.

இந்நிலையில், தோனியின் பேட்டிங் குறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அணி இழந்துவிட்ட கடினமான சூழலில் பேட்டிங் ஆடவருவது மிகவும் சிரமமான விஷயம்தான். நெருக்கடி அதிகமாக இருக்கும். முதல் 25 முதல் 30 பந்துகள் களத்தில் நிலைப்பதற்காக கடத்தினால் பரவாயில்லை. ஆனால் 100 பந்துகளில் 50 ரன்கள் என்பது மிகவும் அதிகம். ஒருநாள் கிரிக்கெட்டில் 100 பந்துகள் என்பது மிகப்பெரிய விஷயம். ரோஹித் சர்மா ஒருவரால் 288 ரன்களை விரட்ட முடியும். ஆனால் எதிர்முனையில் ஆடும் வீரரின் ஒத்துழைப்பு அவசியம். அப்படியான ஒத்துழைப்பு தோனியிடமிருந்து கிடைக்கவில்லை. பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் என்றாலும் அதேநேரத்தில் அணிக்கு என்ன தேவையோ அதை செய்வதும் முக்கியம். அதை செய்ய முடியாவிட்டால், அந்த வீரரால் முடியுமா முடியாதா என்பது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது. ரோஹித் சர்மாவிற்கு தோனியின் இன்னிங்ஸ், இலக்கை விரட்ட உதவவில்லை என்று விமர்சித்தார் அகார்கர்.