வீரர்களை கோலிக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் பவுலர் அஜித் அகார்கர் விமர்சித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3-1 என தொடரை வென்றுவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. தொடர் தோல்வியிலிருந்து மீண்ட இந்திய அணி அதை தக்கவைத்து கொள்ளவில்லை. 

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்கு உள்ளாக சுருட்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததால் தான் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களை குவித்தது. 

கோலி பவுலர்களை சரியாக பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் ஏற்கனவே பலமுறை எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் அஜித் அகார்கர், இரண்டாவது இன்னிங்ஸில் கோலி பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை. முகமது ஷமி மிகச்சிறந்த பவுலர். புதிய பந்தில் அவரை அதிகமாக வீச வைத்திருக்க வேண்டும். ஆனால் புதிய பந்தில் ஹர்திக் பாண்டியாவையும் அஷ்வினையும் அதிகமாக வீசவைத்தார் கோலி. 

இரண்டாவது இன்னிங்ஸில் பவுலர்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ஷமியை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். அதைவிடுத்து 31 ஓவர்களுக்கு மேலாகத்தான் ஷமியை கோலி பந்துவீச அழைத்தார். ஷமியை இன்னும் அதிக ஓவர்கள் வீசவைத்திருக்க வேண்டும் என அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். வீரர்களை பயன்படுத்துவதில் கோலி இன்னும் தேற வேண்டும் என்பதே அகார்கரின் கருத்தாக உள்ளது.