ரிவுயூ கேட்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் அஜித் அகார்கர் அறிவுரை வழங்கியுள்ளார். 

விராட் கோலி ஒரு வீரராக சிறப்பாக ஆடினாலும், அவரது கேப்டன்சியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுகின்றன. வீரர்களை கையாளும் விதம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகங்கள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது என அடுக்கடுக்கான விமர்சனங்கள் கோலி மீது உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோலியின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளை முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்ட தவறியதே இல்லை. 

அந்த வகையில் ரிவியூ கேட்பதில் கோலி அவசரப்படுவதாகவும் சற்று நிதானமாக கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அஜித் அகார்கர் அறிவுரை கூறியுள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் கடைசி போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில், குக் மற்றும் மொயின் அலி ஆகிய இருவருக்கும் ரிவியூ கேட்டு அதை இந்திய அணி இழந்தது. இரண்டுமே அவுட்டாக இருக்க வாய்ப்பில்லை என்பது எளிமையாக தெரிந்தபோதிலும் அவை இரண்டிற்கும் ரிவியூ கேட்டு, முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே இரண்டு ரிவியூ வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி. அந்த சமயத்தில் இங்கிலாந்தின் கையில் 9 விக்கெட்டுகள் எஞ்சியிருந்தன. இது மிகவும் மோசமான அணுகுமுறை. 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஜித் அகார்கர், பவுலர்கள் சற்று நம்பிக்கையுடன் அம்பயரிடம் அப்பீல் செய்து அதை அம்பயர் மறுத்துவிட்டாலே உடனடியாக கோலி ரிவியூ கேட்டுவிடுகிறார். அவருக்கு பவுலரும் விக்கெட் கீப்பரும் உதவ வேண்டும். கோலியும் கொஞ்சம் உணர்ச்சிகளை அடக்கி சுய கட்டுப்பாட்டுடன் நிதானமாக செயல்பட வேண்டும் என அகார்கர் அறிவுரை கூறியுள்ளார்.