10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரை விட்டு வெளியேறியது. ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது. 

ஹாங்காங்குடன் இந்திய அணி மோதும் இரண்டாவது போட்டி இது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 2008ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, ஹாங்காங்குடன் மோதியது. அதன்பிறகு இன்றுதான் மோதுகிறது. 

2008ல் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, ஹாங்காங்கை 256 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தோனி மற்றும் ரெய்னாவின் அதிரடி சதம் மற்றும் சேவாக்கின் அதிரடியான 78 ரன்கள் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவர் முடிவில் 374 ரன்களை குவித்தது. 

375 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங்குடன் ஆடுகிறது.