2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் அணிகள் அடங்கிய பிரிவில் இடம் பெற்றுள்ளது இந்தியா.

ஆசியக் கோப்பை அணிகளுக்கான அதிகாரபூர்வ குலுக்கல் துபாயில் நேற்று இரவு நடைப்பெற்றது. இதில் இந்தியா சார்பில் கேப்டன் சுனில் சேத்ரி, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 24 தலைசிறந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குலுக்கல் நடந்தது. இதில் இந்தியா, யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் நாடுகள் ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளை சந்தித்து ஆடும். குழுவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். 

துபாய், அபுதாபி, ஷார்ஜா, அல் அனின் உள்ளிட்ட நான்கு நகரங்களில் 2019 ஜனவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

"ஏஎப்சி கோப்பை போட்டியில் பங்கேற்பது இந்திய அணிக்கு சிறந்த அனுபவத்தை தரும். ஆசியாவின் சிறந்த வீரர்கள், பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுபவர்களோடு நாமும் விளையாடலாம். 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது சிறப்பானது" என்று கேப்டன் சேத்ரி தெரிவித்தார்.