afghanistan ready to face india in its first test match

அயர்லாந்து அணி, அதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை மிரட்டியதை போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அதிசயம் நடக்கும் என ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர் ஷேஷாத் கூறியுள்ளார்.

எல்லா காலக்கட்டத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. கோலி, புஜாரா, ரஹானே, முரளி விஜய் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் அஸ்வின், ஜடேஜா ஆகிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்கிறது.

இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்திய அணியுடன், தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆடுகிறது. வரும் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. 

ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்பின்னர்களை வைத்தே வீழ்த்த ஆஃப்கானிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. 

இந்த போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ஷேஷாத், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும். எங்கள் ஸ்பின் பவுலர்கள் எப்படி வீசுகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் இந்திய அணிக்கு எதிராக எங்கள் ஸ்பின்னர்களை வைத்தே வீழ்த்த தயாராகி வருகிறோம். நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான போட்டி ஒரு நல்ல டெஸ்ட் போட்டியாக அமையும்.

அயர்லாந்து அணி, அதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை மிரட்டவில்லையா..? அது போன்ற சம்பவம் நடக்கும். உலகளவில் ரஷீத் கான் சிறந்த ஸ்பின்னராக திகழ்கிறார். எந்த ஒரு ஸ்பின் பவுலரையும் விட ரஷீத் சிறந்தவர் என்று என்னால் கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஸ்பின்னர்களை விட ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதாக அந்த அணியின் கேப்டன் அஸ்கரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.