ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய இலங்கை அணி, இன்று ஆஃப்கானிஸ்தானுடன் ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷேஷாத் மற்றும் ஜனத் சிறப்பாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை குவித்தது. ஷேஷாத் 34 ரன்களிலும்  ஜனத் 45 ரன்களிலும் அவுட்டாகினர். அதன்பிறகு களமிறங்கிய ரஹ்மத் ஷா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். 72 ரன்கள் குவித்து சமீராவின் பந்தில் திசாரா பெரேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஷாகிடி 37 ரன்கள் எடுத்து திசாரா பெரேராவின் பந்தில் போல்டானார்.

வங்கதேசத்திற்கு எதிராக மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்காவின் பவுலிங்கை ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அருமையாக ஆடினர். மலிங்கா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மாறாக திசாரா பெரேரா இந்த முறை அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி நேரத்தில் களமிறங்கி இரண்டு சிக்ஸர்களை விளாசிய ரஷீத் கான், 6 பந்தில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இதையடுத்து அந்த அணி 50 ஓவருக்கு 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸை முதல் ஓவரிலேயே முஜீபுர் ரஹ்மான் அவுட்டாக்கினார்.