ஆசிய கோப்பை தொடரில் ஏற்கனவே வங்கதேசத்திடம் தோற்ற இலங்கை அணி, நேற்று ஆஃப்கானிஸ்தானிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரின் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, முதல் போட்டியில் வங்கதேசத்திடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தானுடன் நேற்று மோதியது. ஆனால் இந்த போட்டியிலும் மோசமான பேட்டிங்கால் ஆஃப்கானிஸ்தானிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது இலங்கை அணி. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் முடிந்தவரை ரன்களை சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தனர். அவசரப்படாமல் அருமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். தொடக்க வீரர்கள் ஷேஷாத் மற்றும் ஜனத் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை சேர்த்தனர். அனுபவ பவுலர் மலிங்காவின் பவுலிங்கை அருமையாக சமாளித்து ஆடினர். 

ஷேஷாத் 34 ரன்களில் அவுட்டானார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜனத்தும் ரஹ்மத் ஷாவும் இணைந்து 50 ரன்கள் சேர்த்தனர். 45 ரன்களில் ஜனத் அவுட்டாக, அரைசதம் கடந்து பொறுப்புடன் ஆடிய ரஹ்மத் ஷா 72 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாகிடி 37 ரன்கள் எடுத்து திசாரா பெரேராவின் பந்தில் போல்டானார்.

வங்கதேசத்திற்கு எதிராக மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்காவின் பவுலிங்கை ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அருமையாக ஆடினர். மலிங்கா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மாறாக திசாரா பெரேரா இந்த முறை அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி நேரத்தில் களமிறங்கி இரண்டு சிக்ஸர்களை விளாசிய ரஷீத் கான், 6 பந்தில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து அந்த அணி 50 ஓவருக்கு 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 

250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸை முதல் ஓவரிலேயே முஜீபுர் ரஹ்மான் அவுட்டாக்கினார். இதைத்தொடர்ந்து தனஞ்செயா ரன் அவுட், குசால் பெரேரா தவறான ஷாட் தேர்வால் போல்டு, ஜெயசூரியா ரன் அவுட் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. 

இலங்கை அணி, ஒரு அனுபவம் வாய்ந்த முதிர்ச்சியான சர்வதேச அணியை போல பேட்டிங் ஆடவில்லை. மாறாக கத்துக்குட்டி அணியை போல ஆடியது. 250 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியில் கடினமான இலக்கு இல்லை. அதுவும் ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த இலங்கை அணிக்கு, எளிய இலக்குதான். ஆனால் அதைக்கூட இலங்கை அணியால் விரட்ட முடியவில்லை. பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. 

மேத்யூஸுடன் ஜெயசூரியா பார்ட்னர்ஷிப் அமைந்துவந்த நேரத்தில் ஜெயசூரியா ரன் அவுட்டானார். அதன்பிறகு அனுபவ வீரர்களான மேத்யூஸ் மற்றும் திசாரா பெரேரா ஜோடி, அந்த அணிக்கு சற்று நம்பிக்கையளித்தது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. மேத்யூஸ் 22 ரன்களிலும் திசாரா பெரேரா 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து அந்த அணி 158 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

ஆஃப்கானிஸ்தான் அணி 91 ரன்களில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் தோல்வியை தழுவியதால் இலங்கை அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.