afghanistan coach praised rashid khan

ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டரான ரஷீத் கான், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். இந்த சீசனில் ஹைதராபாத் அணி இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு ரஷீத் கானின் பங்களிப்பு அதிகம். லெக் ஸ்பின்னரான ரஷீத் கானின் பந்துவீச்சை தோனி, டிவில்லியர்ஸ், கோலி போன்ற உலகின் தலைசிறந்த முன்னணி வீரர்களால் கூட சமாளிக்க முடியவில்லை. 

மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் ரஷீத் கான், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். தனது முழுமையான பங்களிப்பை அணிக்கு அளிக்கிறார். களத்தில் முழு ஈடுபாட்டுடன் ஆடுகிறார். ரஷீத் கானை உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் என சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான், முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில், வரும் 14ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டெஸ்ட் அணியின் ரஷீத் கான் உள்ளார். இந்நிலையில், இந்த போட்டி தொடர்பாகவும் ரஷீத் கான் தொடர்பாகவும் பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் சிம்மன்ஸ், ரஷீத் கான் வயது தான் 19. ஆனால் வயதில் சிறியவராக இருந்தாலும், அவரது திறமையும் பக்குவமும் 30 வயதுடைய வீரர்களை போன்றது. அவரிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொண்டு அதை வழங்கக்கூடிய வீரர் ரஷீத். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என நம்புகிறோம் என சிம்மன்ஸ் தெரிவித்தார்.