4 great cricketers who have never scored a test century in india

அந்நிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிப்பது சிறப்பு வாய்ந்தது. தற்போது கிரிக்கெட் போட்டி சுருங்கிவிட்ட போதிலும், டெஸ்ட் போட்டியில் சோபிக்கும் வீரர் தான் சிறந்த வீரராக அங்கீகரிக்கப்படுவர். டெஸ்ட் போட்டியில் அந்நிய மண்ணில் சதமடிப்பது சற்று கடினம் தான். 

அந்த வகையில், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான சில ஜாம்பவான்கள், இந்திய மண்ணில் ஒரு முறை கூட சதமடித்ததில்லை. அப்படி இந்தியாவில் சதமடிக்காத சில ஜாம்பவான் வீரர்களை பற்றி பார்ப்போம்.

பிரயன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)

கிரிக்கெட் வரலாற்றில் அழியாத இடம்பிடித்த பிரயன் லாரா, மிகச்சிறந்த வீரர். கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு நிகராக மதிக்கப்படக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிரயன் லாரா, இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்ததில்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 34 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள லாரா, இந்தியாவில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. 1994ம் ஆண்டு மட்டுமே இந்தியா வந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் லாரா. 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 198 ரன்கள் எடுத்தார். அவற்றில் ஒரு இன்னிங்சில் 91 ரன்களில் லாரா அவுட்டானார்.

கிரீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான கிரீம் ஸ்மித், அந்த அணியின் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்தியாவிற்கு மூன்று முறை வந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள 431 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜஸ்டின் லாங்கரும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்ததில்லை. இந்தியாவில் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 389 ரன்கள் அடித்துள்ளார். 23 சர்வதேச டெஸ்ட் சதங்களை அடித்துள்ள லாங்கர், இந்தியாவில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணிக்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களை அடித்துள்ள கிறிஸ் கெய்ல், இந்திய மண்ணில் ஒரு முறை கூட சதமடித்ததில்லை. 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் கெய்ல். 5 போட்டிகளில் ஆடி 257 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய மண்ணில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 88.