23rd Winter Olympic Games Starting from kolakala ...

பலநாட்டு தலைவர்கள் பங்கேற்ற 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி கோலாகலமான தொடக்க விழாவில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-இன் தங்கையான கிம் யோ ஜோங், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 24-இல் கிரீஸில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதியின் 101 நாள் பயணம் பல்வேறு நாடுகளைக் கடந்து பியோங்சாங்கில் முடிவடைந்தது. அங்கு வந்தடைந்த ஒலிம்பிக் ஜோதியை தென் கொரிய வீராங்கனை பார்க் ஜோங் ஆ, வடகொரிய வீரர் ஜோங் சு ஹியோன் ஆகியோர் இணைந்து தொடக்க விழா நடைபெற்ற பிரமாண்ட மைதானத்துக்கு எடுத்து வந்தனர்.

மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க, அவர்கள் அந்த ஜோதியை தென் கொரியாவின் ஸ்கேட்டிங் வீராங்கனை கிம் யு நா-விடம் தந்தனர். அவர் அந்த கைப்பிடி ஜோதியைக் கொண்டு, மைதானத்தில் இருந்த பிரமாண்ட ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பின்னர் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனிடையே, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், தங்களது நாட்டுக் கொடியுடன் வரிசையாக அணிவகுத்தனர்.

பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி, வரும் 25-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 92 நாடுகளைச் சேர்ந்த 2952 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.