2019 ipl may have chance to shift foreign

ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. 11வது சீசன் முடிந்த நிலையில், அடுத்த சீசன் குறித்த விவாதம் பிரதானமாக உள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாலும், அடுத்த ஆண்டு மே 30ம் தேதி உலக கோப்பை தொடங்க உள்ளதாலும் வழக்கத்தைவிட ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐபிஎல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மார்ச் 29ம் தேதி ஐபிஎல் 12வது சீசன் தொடங்கப்படும் என கூறப்பட்டது. 

மக்களவை தேர்தல் சமயத்தில் உள்ள போட்டிகள் மட்டும் வெளிநாட்டில் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது சீசன் முழுவதையுமே வெளிநாட்டில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால், அந்த சீசன் முழுவதும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன்பிறகு 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால், சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அடுத்த சீசன் முழுவதுமே வெளிநாட்டிற்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனை இந்தியாவில் நடத்த முடியாது என நினைக்கிறேன். மக்களவை தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி தேதிகள் ஒத்து வந்தால், பாதுகாப்பு வழங்க போலீஸும் மத்திய மாநில அரசுகளும் மறுத்துவிடும். அதனால் அடுத்த சீசனை வெளிநாட்டில் தான் நடத்த வேண்டியிருக்கும் என ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

வெளிநாட்டில் நடத்துவது உறுதியாகிவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது.