சிட்னியில் நாளை தொடங்க உள்ள கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியின் தொடங்குகிறது. 

இந்திய அணி தொடரை வெல்வதை தடுக்க வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய அணி கடைசி போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. எனவே இந்திய அணியை வரலாறு படைக்க அனுமதிக்கக்கூடாது என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதே ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுக்கும். அதைப் பயன்படுத்தி இந்திய அணி வெல்லலாம். 

ஆனால் போட்டி டிரா ஆனாலும் இந்திய அணிதான் தொடரை வெல்லும். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி அதிகம். ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் கடைசி போட்டியிலிருந்து விலகி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். அதேநேரத்தில் அஷ்வினும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை.

இந்நிலையில், கடைசி போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாததால் மூன்றாவது போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல், கடைசி போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் மூன்று போட்டிகளில் பெரியளவில் பவுலிங்கில் சோபிக்காத இஷாந்த் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த், மூன்று போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பும்ராவும் ஷமியும்தான் அசத்திவருகின்றனர். அதனால் இஷாந்த் நீக்கப்பட்டு உமேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடைசி போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி:

ராகுல், மயன்க், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ். 

அஷ்வின் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடுவது சந்தேகம்தான். நாளை போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அவரது உடற்தகுதியை பொறுத்து அவர் ஆடுவதும் ஆடாததும் உறுதி செய்யப்படும்.