Asianet News TamilAsianet News Tamil

Sri Lanka vs Zimbabwe: தசுன் ஷனாகாவின் சதம் வீண்.. இலங்கை மண்ணில் அந்த அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே அணி, 2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
 

zimbabwe beat sri lanka in second odi and level the series
Author
Pallekele, First Published Jan 19, 2022, 2:28 PM IST

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு தொடக்க வீரர்கள் 59 ரன்களை சேர்த்தனர். அதைப்பயன்படுத்திக்கொண்ட கேப்டன் எர்வின் அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்தார். 9 ரன்னில் சதத்தை தவறவிட்டாலும், ஜிம்பாப்வே அணிக்கு தேவையானதை செய்துகொடுத்தார் எர்வின். பின்வரிசையில் சிக்கந்தர் ராஜா சிறப்பாக ஆடி அரைசதம் (56) அடிக்க, 50 ஓவரில் 302 ரன்களை குவித்தது ஜிம்பாப்வே அணி.

303 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் 3ம் வரிசை வீரர் காமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்தார். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் மற்ற வீரர்கள் சொதப்ப, பின்வரிசையில் இறங்கிய கேப்டன் தசுன் ஷனாகா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஆனால் 102 ரன்னில் அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்ற பின்வரிசை வீரர்களால் வெற்றிக்கு தேவையான இலக்கை எட்ட முடியவில்லை. 50 ஓவரில் 280 ரன்கள் அடித்த இலங்கை அணி 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற ஜிம்பாப்வே அணி, இலங்கை மண்ணில் அந்த அணியை 2வது ஒருநாள் போட்டியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios