ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சென்று ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் அடித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா சதமும், அஸ்கர் ஆஃப்கான் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் அரைசதமும் அடித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய மூவரது விக்கெட் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை 205 ரன்களுக்கு சுருட்டினார் ஆஃப்கான் கேப்டன் ரஷீத் கான். 

இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. முதல் 3 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜட்ரானும் அஸ்கர் ஆஃப்கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்களை சேர்த்தனர். ஜட்ரான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடிக்க, அஸ்கர் ஆஃப்கானும் அரைசதம் அடித்தார். ஆனால் அஸ்கர் ஆஃப்கான், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஜட்ரானுடன் அஃப்ஸர் சேஸாய் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஃப்கானிஸ்தான் அணியின் கையில் இன்னும் 6 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், இப்போதே அந்த அணி 270 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.