இந்திய அணியின் வலுவான நான்காம் வரிசை வீரராக இருந்த யுவராஜ் சிங், ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 2 ஆண்டுகாலம் பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டும் கூட, உலக கோப்பைக்கு சரியான நான்காம் வரிசை வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் கண்டறிந்து அழைத்து செல்ல முடியவில்லை. 

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசைக்கு உலக கோப்பைக்கு முன் தீர்வு காணும் விதமாக பல வீரர்கள் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர்.  ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு என பலர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். 

ஆனால் உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். உலக கோப்பையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை எதிரொலித்தது. இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாம் வரிசையில் தான் இறங்கினார்.

இரண்டு போட்டிகளிலுமே 2 வித்தியாசமான சூழல்களில் ஆடி அசத்தினார். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ, அதை இரண்டு போட்டியிலும் செய்தார். இரண்டாவது போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரொடேட் செய்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி போட்டியில் தாறுமாறாக அடித்து ஆடினார். இதன்மூலம் தன்னால் எந்த சூழலிலும் அதற்கேற்ப ஆடி அணியை காப்பாற்ற முடியும் என நிரூபித்து காட்டினார்.

இதையடுத்து நான்காம் வரிசையை கிட்டத்தட்ட ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். ஆனால் நான்காம் வரிசை பேட்டிங் சிக்கல் இருந்தபோதும், டாப் 3 பேட்ஸ்மேன்கள் வலுவாக உள்ளனர். அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்ற கருத்தே பிராதனமாக பேசப்பட்டது. இதே நம்பிக்கையுடன் தான் உலக கோப்பைக்கும்  சென்றனர். ஆனால் டாப் ஆர்டர் சொதப்பினால் இந்திய அணியின் நிலை என்ன என்பதை அரையிறுதி போட்டி பட்டவர்த்தனப்படுத்தி காட்டியது. மிடில் ஆர்டர் வலுவாக இல்லாததால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடிவாங்கி இந்திய அணி திரும்பியது. 

ஆனாலும் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வலுவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் டெத் ஓவர்கள் வரை ஆடினாலே போதும் என்ற மனநிலையும் எண்ணமும் இந்திய அணி நிர்வாகத்திடம் இன்னும் இருக்கிறது. என்னதான் டாப் ஆர்டர் வலுவாக இருந்தாலும், சிறப்பான மிடில் ஆர்டரை பெற்றிருக்க வேண்டும் என்ற பாடத்தை, உலக கோப்பை அரையிறுதி போட்டி கற்றுக்கொடுத்தும் இன்னும் இந்திய அணி நிர்வாகம் அதை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை. கேப்டன் கோலியும் அதை முழுமையாக உணரவில்லை. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகத்தின் மனநிலையை செமயா நக்கலடித்துள்ளார் யுவராஜ் சிங். 

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை கண்டு வியந்த ஹர்பஜன் சிங், நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள சஞ்சு சாம்சனை இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக இறக்கலாம் என டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

அதைக்கண்ட யுவராஜ் சிங், டாப் ஆர்டர் வலுவாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு நான்காம் வரிசை பேட்ஸ்மேனே தேவையில்லை என்று செம நக்கலாக பதிலளித்து டுவீட் செய்துள்ளார். டாப் ஆர்டர் வலுவாக இருக்கிறது என்ற ஆணவத்துடனும் அதீத நம்பிக்கையுடனும் இருக்கும் இந்திய அணியின் மனநிலையை கடுமையாக சாடியுள்ளார் யுவராஜ். அதாவது, டாப் ஆர்டர் தான் வலுவாக இருக்கிறதே.. பின்ன நான்காம் வரிசை பேட்ஸ்மேன் எதற்கு? என்கிற தொனியில் இது அமைந்திருக்கிறது. மேலும் என்னதான் டாப் ஆர்டர் வலுவாக இருந்தாலும் சிறப்பான மிடில் ஆர்டர் தேவை என்பதை மண்டையில் உரைக்கும்படி சொல்லியுள்ளார் யுவராஜ் சிங்.

ஹர்பஜன் சிங், இன்றைக்கு சொல்லும் கருத்தை உலக கோப்பைக்கு முன்பாகவே சொல்லிவிட்டார் கவுதம் கம்பீர். சஞ்சு சாம்சனை உலக கோப்பையிலேயே நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.