இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்றார். 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றபோது அந்த தொடர்களில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அந்த 2 உலக கோப்பை தொடர்களிலுமே யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதை வென்றார். 

யுவராஜ் சிங் தனது கெரியரில் எத்தனையோ சம்பவங்கள் செய்திருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத சம்பவம் என்றால், அது 2007 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதுதான்.

அந்த ஓவருக்கு முன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஃப்ளிண்டாஃபுக்கும் யுவராஜ் சிங்குக்கும் ஒரு வாக்குவாதம் நடக்கும். அந்த ஃப்ளிண்டாஃப் வம்பு இழுத்ததால் செம கடுப்பில் இருந்த யுவராஜ் சிங், பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினார். கடுங்கோபத்துடன் அந்த ஓவரை ஆடிய யுவராஜ், அந்த ஓவரில் எப்படி போட்டாலும் அடித்தார். யுவராஜ் சிங் செய்த அந்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட யுவராஜ் சிங், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது குறித்து பேசினார். 2007ல் நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடர் தான் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றியது. இங்கிலாந்துக்கு எதிராக நான்  6 சிக்ஸர்கள் அடித்தது என்னுடைய தினமாக அமைந்துவிட்டது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்து யார்க்கர். ஆனால் நான் அந்த பந்தையும் என்னால் சிக்ஸர் அடிக்க முடிந்தது என்றால் அதற்கு ஒரேயொரு காரணம் அது என்னுடைய தினம். அதனால்தான் என்னால் அது முடிந்தது என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.