டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த யுவராஜ் சிங், அந்த போட்டியில் வெறும் 12 பந்தில் அரைசதம் அடித்து அந்த சாதனையையும் படைத்தார். இதுவரை டி20 கிரிக்கெட்டின் அதிவேக அரைசதமாக அது உள்ளது. 

ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமெல்லாம் சாத்தியமே கிடையாது என்று நினைத்தவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் இரட்டை சதத்தை விளாசி,  முடியாதது எதுவுமில்லை என்று நிரூபித்து காட்டினார். அவரை தொடர்ந்து சேவாக், ரோஹித் சர்மா, கெய்ல், மார்டின் கப்டில், ஃபகார் ஜமான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்தனர். அதிலும் ரோஹித் சர்மா 3 இரட்டை சதங்களை அசால்ட்டாக அடித்து சாதனை படைத்தார். 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை யார் முதலில் அடிப்பார்? எப்போது அடிப்பார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சாதனையை படைக்கும் முனைப்பில் பல வீரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் யாரால் இரட்டை சதமடிக்க முடியும் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் முடியாதது என்று எதுவுமில்லை. அதிலும் இந்த காலத்தில் கிரிக்கெட் போய்க்கொண்டிருக்கும் சூழலை பார்த்தால் எதுவுமே முடியாத காரியம் அல்ல என்றுதான் நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகிய மூவரில் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதமடிப்பார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 

Also Read - ஒரே ஓவரில் வெற்றியை தாரைவார்த்த பவுலர்.. இந்திய அணி அடைந்த அசிங்கத்துக்கு முக்கிய காரணம் இதுதான், இவர்தான்