இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூசிலாந்து. 

முதல் ஒருநாள் போட்டியில் 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில், இந்திய அணியை 274 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று மவுண்ட் மாங்கனூயில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 297 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரில் அடித்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி நான்காவது முறையாக ஒயிட்வாஷ் ஆனது. இந்தியாவுக்கு எதிரான மிகச்சிறந்த வெற்றிகள் இரண்டையும் ஒரே தொடரில் தாரைவார்த்தது இந்தியா. முதல் போட்டியில் 348 ரன்களை விரட்டியதுதான் இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி. இரண்டாவது சிறந்த வெற்றி, இந்த போட்டியில் 297 ரன்கள் என்ற இலக்கை விரட்டியதுதான். 

இவ்வாறு படுமோசமான சாதனைகளை இந்திய அணி படைப்பதற்கு இந்திய அணி நிர்வாகமே தான் காரணம். ரன்களை வாரிவழங்கும் வள்ளலான ஷர்துல் தாகூரை அணியிலிருந்து நீக்கவே மாட்டோம் என்று அடம்பிடித்து, அவர் ரன்களை வாரி வழங்க வழங்க, அதைப்பற்றி கவலைப்படாமல் அனைத்து போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 80 ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூர், இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி 60 ரன்களை வழங்கினார். அவரை நீக்கிவிட்டு ஷமியை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தும்கூட, அவரைத்தான் ஆடவைப்போம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு மறுபடியும் ஆடவைத்தது இந்திய அணி நிர்வாகம். இதையடுத்து இன்றைய போட்டியிலும் அவரது பவுலிங்கில் அடி வெளுத்து எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்.

Also Read - இந்திய அணியின் கேவலமான சாதனை.. இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டாப் 2 வெற்றி.. சுவாரஸ்ய தகவல்கள்

9.1 ஓவர் வீசி 87 ரன்களை வழங்கி, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர் ஒருவரை மட்டுமே தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் அணிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாமல் இவர் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசி, இலக்கை தடுக்க வேண்டிய கட்டாயங்களில் இருக்கும்போது, இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கின்ற சமயங்களில், ஒரே ஓவரில் ரன்களை வாரி வழங்கி எதிரணிக்கு வெற்றியை தாரைவார்த்துவிடுகிறார். 

இன்றைய போட்டியில் கூட, 47வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை வழங்கி, 50வது ஓவர் வரை போயிருக்க வேண்டிய போட்டியில், 46வது ஓவரிலேயே நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்துகொடுத்தார். மூன்று போட்டிகளிலுமே ஓவருக்கு 10 ரன் விகிதத்திற்கு மேலான ரன்களை வழங்கியுள்ளார். இந்த தொடர் முழுவதுமே இவரது பவுலிங் வேஸ்ட். இந்த தொடரின் மூலம் மீண்டுமொருமுறை, தான் இந்திய அணியில் ஆட தகுதியில்லாத வீரர் என்று நிரூபித்துள்ளார் ஷர்துல் தாகூர்.